Jaffna

Dambakola Patuna Sangamitta Temple Port of Jambukola

இலங்கையில் நீங்கள் காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதும் இலங்கை வரலாற்றை பௌத்தமதத்திற்கு இட்டுச் செல்வதுடன் தொடர்புடையதாகவும் அமையும் ஆரம்பப்புள்ளி மாதகலில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சங்கமித்ரா விகாரையுடன் தொடர்பு உடையதாகும். இது நிகழ்ந்த காலப்பகுதியாக குறிப்பிடப்படுவது கி.மு 3ம் நூற்றாண்டு ஆகும். அக் காலத்தில் இவ் இடம் யம்புகோளப்பட்டினம் என அழைக்கப்படும் பாரிய வர்த்தக துறைமுகத்துடன் தொடர்புடையதாகும். இதனை சற்று நோக்குவோமானால் இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகளாகிய நாகத்தமிழர்கள் சிறந்த பொருளாதார வளத்தையும் உரோம், கிரெக்கம், சீனா போன்ற நாடுகளுடன் கடல்மார்க்க வாணிபம் செய்து செழிப்புற்றிருந்தமையும் நாம் வரலாற்று ரிதியாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ் யம்புகோளப்பட்டினம் திரைகடலோடி திரவியம் தேடிய நம் முன்னோரின் சிறப்புற்ற வாழ்விற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது பூம்புகார் போன்ற பெரும் துறைமுகத்திற்கு ஒப்பானது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான கேந்திர முக்கியத்துவமும் வரலாற்று சிறப்பும் மிக்க ஜம்புகோளப் பட்டினத்திற்கு கி.மு 3ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவை ஒரு குடையில் ஆட்சி செய்த அசோகப் பேரரசனின் மகளான சங்கமித்திரை இலங்கைக்கு புத்தசமயத்தை பரப்பும் நோக்குடன் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் வெள்ளரசு மரக்கிளையுடன் 18 துறைகளில் நிபுணத்துவம் பெற்ற குழுவுடன் இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

இதனைச் சிறப்பிக்கும் நோக்கில் அக் காலத்தில் அனுராதபுரத்தை ராஜதானியாக ஆட்சி செய்த நாகவம்ச மன்னனாகிய மூத்த சிவனின் மகன் தீசன் பெருஊர்வலமாக இசை வாத்தியங்கள் வானளாவ முழங்க அழைத்துச் சென்றான். அங்கு சங்கமித்தாயால் கொண்டுவரப்பட்ட வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பட்ட இடமே ஸ்ரீ மகாபோதி ஆகும். அதில் ஓர் கிளை சங்கமித்தை வந்து இறங்கிய இடமாகிய ஜம்புகோளப்பட்டினத்தில் நாட்டப்பட்டு சங்கமித்ரா விகாரையென பொத்த மத வணக்கஸ்தலமாக திகழ்கின்றது. இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் சங்கமித்ரா வருகையை மிக அழகாக சித்தரிக்கின்றன. இதன் பின்னரே தமிழ் மன்னன் தீசன் ‘தேவாநம்பிய தீசன்’ எனப் பெயர் பெறுகின்றான்.

ஆனால் இலங்கையில் திரைகடலோடி திரவியம் தேடிய நம் முன்னோர்களின் தொன்மை மிக்க துறைமுகமான ஜம்புகோளப்பட்டினம் இன்று மண்ணோடு மண்ணாகி இருந்த இடமே தெரியாது உள்ளது. இத்துறைமுகம் மாதகல் முதல் காரைநகர் நெடுந்தீவு வரை பரந்து விரிந்து வியாபித்த ஒன்றாக விளங்கியுள்ளது. பாரிய மரக்கலங்கள் வந்து தரித்திருக்கும் வகையில் சிறந்த கட்டுமானங்களை கொண்டிருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். வரலாற்றை அறிந்து கொள்வோம். மீட்டுருவாக்கங்களை மேற்கொள்வோம்.