Colombo

Jungle Beach (Unawatuna) – All You Need to Know BEFORE – காட்டு கடற்கரைக்கு நேற்று நாம் சென்ற பயணம்

இலங்கை தீவிலே ஓர் அழகான கடற்கரையாகவும் காலியின் கடற்கரை அழகை மெச்சுவிக்கும் கடற்கரையாகவும் திகழும் காட்டு கடற்கரைக்கு நேற்று நாம் சென்ற பயணம் வர்ணிக்க வார்த்தைகள் அற்றது. காட்டு கடற்கரை என்றால் எவரிற்கும் அறியாத, தெரியாத, புரியாத பெயர். அதன் ஆங்கில பதமே அனைவருக்கும் தெரிந்த பெயர் அதுதான் ஜங்கிள் பீஜ்
நேற்று ஓர் அதிகாலைப் பொழுதினிலே 5.30 மணி அளவில் நாம் வீட்டை விட்டு புறப்பட்டு பேருந்தின் ஊடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்தோம். நாம் சென்றடைந்த நேரம் காலை 6.25 மணி ஆகும். புகையிரதம் 6.30 மணி அளவில் வந்து சேர்ந்தது அது அதன் பின்னர் 6.50 மணி ஆகும் போது தான் புகையிரத நிலையத்தை விட்டு புறப்பட்டது.

அப் புகையிரத்தத்தினுள் இருக்கையில் இருப்பதென்றால்” கல்லிலே நார் உரிப்பது போன்றது” என கூறலாம். ஏனெனில் இடமே கிடையாத சனநெரிசல். கூட்டம் கூட்டமாக மக்கள் குமிந்தனர். இருப்பினும் தந்தையார் தனது பயணப்பையின் மூலமாக எமக்கு இருக்கைகளை சேகரித்தார். நாம் பயணம் செய்தது அப்புகையிரதத்தின் மூன்றாம் வகுப்பில் ஆகும். நாம் அமர்ந்திருந்த கரை சாளரத்தின் ஊடாக நகரையே காண முடிந்தது. எமக்கு எதிராக உள்ள மறுபக்கச் சாளரத்தினால் தான் கடற்கரையோர பிரயாணத்தை உணர முடியும். எனினும் “அனைத்துமே நல்லதுக்கு” என்ற கூற்றை நினைத்து மகிழ வேண்டியதுதான். பின்னர் மூன்று அரை மணி நேர பயணத்தின் பின்னர் 10.20 மணியளவில் காலியை அடைந்தோம். காலி நகரை அடைந்தபோது எம் குடும்பத்தினர் அனைவருக்கும் பசி என்றால் பசி அப்படி ஒரு பசி. அதனால் நாம் ஓர் உணவகத்தில் உணவை உட்கொண்டோம். பின்னர் முச்சக்கர வண்டியில் காட்டு கடற்கரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். புகையிரத நிலையத்தின் அருகாமையிலே தான் முச்சக்கர வண்டி தரிப்படம் காணப்பட்டது. அங்கிருந்து காட்டு கடற்கரை வரையிலான தூரம் 7km ஆகும்.அதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர் பெற்ற பணம் ரூபாய் 1000 ஆகும்.அப் பயணத்திற்கு அது தகுந்ததே ஆகும். முச்சக்கர வண்டி சென்ற பாதையோ மேடானது அதிலும் ஐவரை சுமந்த வண்ணம் மலையை ஏறியதென்றால் எப்படி ஒரு கடினமான கணம் என சிந்தித்துப் பாருங்களேன்! ஒரு வழியாக காட்டை அடைந்தோமே தவிர இன்னும் கடற்கரையை அடையவில்லை. காட்டினுள் நுழையும் நுழைவாயிலின் அருகே பல் தரப்பட்ட பான வகைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் நாம் கிரல்ல பழப்பானத்தை கொள்வனவு செய்திருந்தோம். அப் பழத்தின் பானம் சுவைப்பதற்கு விளாம்பழப்பான சுவை போன்றே இருக்கும். அதனை 1l போத்தலில் வாங்கிக் கொண்டு ஒரு தண்ணீர் போத்தலையும் கொள்வனவு செய்திருந்தோம். பின்னர் நுழைவாயிலின் ஊடாக மலை ஏறி இறங்கி கடற்கரையை அடைந்தோம்.

மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதினார்கள். அதிலும் சிலர் நீராடுவதற்கு, குளிப்பதற்கு, கால்பந்து விளையாடுவதற்கு இன்னும் சிலர் அதிலும் வெளிநாட்டவர்கள் சூரிய குளியலுக்குமாக கடற்கரையை சூழ்ந்திருந்தனர். நாம் அக்கடற்கரையின் ஒரு கரையோரமாக எவரிற்கும் இடையூறு விளைவிக்காத வண்ணம் ஒரு கடல் மாவின் நிழலின் கீழ் எமது உடமைகளுடன் அமர்ந்திருந்தோம். குரங்கு எனும் சேட்டை விலங்கு பல சேட்டைகளை செய்தது அதன் சேட்டைகளை கண்டு வெளிநாட்டுக் குடும்பத்தினர் மெய் மறந்து அக்குரங்கிற்கு உணவாக வாழைப்பழங்களை கொடுத்தனர். நல்ல வேளை அது அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. பின்னர் ஒரு வழியாக நானும் குளிப்பதற்கு அப்பா, தம்பி, தங்கையுடன் சென்றேன். அப்போது எமது மாமி அங்கே வந்தார்கள். அதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் நாம் சற்று தினங்களுக்கு முன்பே அவர்களும் எம்முடன் வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் மாமி இல்லை என்று சொல்லிவிட்டு எவ்வித தொல்லையும் இன்றி வந்தார்கள். எனக்கு இரண்டு வருடங்களின் பின்னர் கடலினுள் நீந்தியது பேரானந்தத்தை கொடுத்தது. கடலினுள் நீந்துதல் ;மிதத்தல்; மூழ்குதல் என ஆசை தீர நீராடினேன். எனது மாமியின் செயல்கள் இன்னும் மெச்சத்தக்கவை ஒன்றே ஒன்றுதான் செய்தார்கள். கடற்கரையில் நின்ற நேரம் முழுவதும் செய்தார்கள். அவர் செய்த செயலைக் கண்டு எனது தங்கையார்” இறந்த பிணம் போல கடலின் மேல் மிதக்கிறீர்களே” என கூறினாள். அதன்போது தான் அவர் செய்த செயலே தெரிந்தது கடலின் மேல் வானம் பார்த்தபடி மிதப்பதாகும். அவ்வாறு நானும் தந்தையும் மாமியும் மாத்திரமே செய்தோம். அது மிகவும் இனிமையாக இருக்கும். கடல் எம்மை தாலாட்ட; கடல் அலை மெட்டு தட்ட; நாம் அதற்கு துயில் கொள்ள இனிமையான அனுபவம் கிடைக்கும். என்றாலும் சில சமயம் உறங்கிய வண்ணம் நடுக்கடலிலேயே தான் துயில் எழ நேரிடும் ஆகவே எதையும் அளவோடு செய்தல் நன்று. 1.00 மணி அளவில் மதிய உணவை நானும் என் தங்கையும் உன்று விட்டு 2.00 மணி அளவில் மீண்டும் கடற்கரையில் நீராடச் சென்றோம். உணவுப் பொதிகள் இரண்டை வாங்கிக் கொண்டு தான் வரும்போது வந்ததனால் மதிய உணவை உண்பது இலகுவாய் அமைந்தது. அவ்வாறே தம்பியும் உணவை உன்று விட்டு எம்முடன் கடலிலே கலந்தான். தந்தையும் தாயும் மாமியும் மதிய உணவை உட்கொள்ளவில்லை காரணம்: அவர்கள் காலை உணவை 10.30 மணியளவில் உட்கொண்டதனால் பசி எடுக்க வில்லையாம் . சரி என ஒன்றிற்கு இருமுறையாக நாம் குளித்தோம்; மன மகிழ்வடைந்தோம்.

என் தாயின் திருவிளையாடல்களை கூறுகிறேன் கேளுங்களேன். கடற்கரையிலேயே நின்றார். ஏனென்று கேட்டால் “தன்னை அலை இழுத்துக் கொண்டு செல்கிறதாம்” கரையிலே நின்றால் இழுக்காமல் அலைதான் என்ன செய்யும் பாவம். இவற்றைச் சற்று தள்ளி வைத்துவிட்டு கதைக்குள் வருவோம் வாருங்கள்.

3.30 மணி ஆகும் போது என்னால் கடலினுள் நிற்க முடியவில்லை. ஓர் உடல் சோர்வு அதனால் நான் வெளியே வந்து விட்டேன். ஆடை மாற்றுவதற்கு புலி பதங்கி மானை வேட்டையாடுவது போல் ஒரு கற்பாறையின் பின்னே நின்று தான் முன்னே நின்றவர்களின் பார்வையில் இருந்து தப்ப முடிந்தது. அவ்வாறே நாம் அனைவரும் உடைகளை மாற்றிய வண்ணம் கடற்கரையை விட்டு வீதியிற்கு வந்தோம். அங்கே மூன்று முச்சக்கர வண்டிகள் இருந்தன. அதில் எமக்கு இரண்டு முச்சக்கர வண்டிகள் தேவைப்பட்டன. ஒன்றில் நான், அம்மா, அப்பா செல்வதற்கு மற்றும் ஒன்றில் மாமி, தம்பி, தங்கை செல்வதற்கு. சரி அவ்வாறே செய்வோம் என்று அங்கே இருந்த இருவரிடம் கேட்டால் ஒருவர் கூறினார்.” தனக்கு சினமாகவும் களைப்பாகவும் அலுப்பாகவும் இருக்கிறது”. என்று இன்னொருவர் கூறினார் “சரி ஓட்டத்திற்கு வருகிறேன்” என்று.

சரி என்று பின்னர் அவருடன் நின்று இன்னுமொருவர் முச்சக்கர வண்டியுடன் வருகை தர நாங்கள் அனைவரும் நகரத்தை நோக்கி புறப்பட்டோம். அங்கே எனது தந்தைக்குத் தெரிந்த ஒரு உணவகத்திற்கு சென்று தாயும் தந்தையும் மாமியும் அவர்களது மதிய உணவை மாலை 4.30 மணி அளவில் உன்று களித்தனர். பின்னர் புகையிரத திணைக்கள இணையத்தளத்தின் மூலமாக புகையிரதம் ஒன்று 5.00 மணிக்கு காலி புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் என நினைத்து புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தால் இன்று 3.30க்கு தான் இறுதிப் புகையிரதம் இனி இன்று இல்லை என கூறிவிட்டார்கள். எம் நிலையோ இலவு காத்த கிளி போல மாறியது இருப்பினும் எம்மிடம் ஒரு வழி கையில் தான் இருந்தது. எனது மாமி” கடுகதி பாதையின் ஊடாகச் செல்லும் பேருந்தில் செல்ல போகிறேன். கடற்கரை காட்சியை பார்த்த வண்ணம் பயணிப்பதற்காகத்தான் புகையிரதத்தில் வந்தேன்”. என்று கூறியிருந்ததனால் அவருடன் அப் பேருந்திலேயே மாலை 5.20 மணியளவில் ஏறி 6.40 மணியளவில் கொழும்பு நகரை அடைந்தோம். பின்னலர் சாதாரண பேருந்தின் மூலமாக வீட்டை வந்தடைந்தோம்.

காலை 5:00 மணிக்கு தொடங்கிய எம் பயணம் இரவு 7:20 மணி அளவில் நிறைவு பெற்றது இப்பயணம் எனக்கு வாழ்வின் நெழிவு சுழிவுகளை கற்றுத் தந்தது. அப்படிப்பட்ட இந்த கடலோரப் பிரயாணத்தை நான் என் வாழ்நாளிலே ஒரு நாளும் மறவேன்.

உ.காருண்யா