Sri Lanka

Sinharaja Rainforest in Tamil – சிங்கராஜா வனம்

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும்.

இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க அரசிதலின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528/14 அரசிதழின் படி, 7,648.2 எக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 எக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 எக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது.

இங்கு சராசரி வெப்ப நிலையாக 23.6c வெப்ப நிலையையும் அத்துடன் ஆண்டொன்றிற்கு பெறப்படும் மழைவீழ்ச்சியாக 2500mm மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ளது.மே -ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் மூலமும்,ஒக்டோபர் -டிசம்பர் மாதங்களில் வடகீழ்ப் பருவக்காற்றின் மூலமும் மழை கிடைக்கப்படுகிறது.

சிங்கராஜவனம் முன்பு அதிகளவான உயிர்பல்வகைமையை கொண்டுள்ளபோதும் இன்றைய காலத்தில் அவற்றைக் காண்பது அரிதாகவே உள்ளது. இருப்பினும் இன்றும் நகருயிர்கள் அதிகளவிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் விஷம் கொண்ட பாம்பினங்கள், ஓணான்கள் இருப்பதுடன் விசத்தவளைகள், மீனினங்கள் போன்றவற்றையும் காணலாம். ஆனால் நகரமயமாக்கல் வீதிகள் அமைத்தல் காரணமாக பெரிய விலங்குகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. இன்று இலங்கையில் எந்த ஒரு காட்டிலுமே சிங்கம் இல்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்பு இங்கு சிங்கங்கள் அதிகளவில் காணப்படடதாலேயே சிங்கராஜவனம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது.

இக் காட்டிலுள்ள மரங்கள் வானளாவ உயர்ந்து முகடுகள் ஒன்றுடனொன்று முட்டிய வண்ணம் காட்டினுள் ஒளி புகாத அளவிற்கு காட்சியளிக்கின்றன. எனவே விதானப் படை,உப விதானப் படை,எனப் படை கொண்ட அமைப்புகளாக மரங்கள் காட்சி தருகின்றன. ஒளியைப் பெறுவதற்காக பெரிய தாவரங்களில் வளரும் மேலொட்டிகளையும் காணலாம். ஒளி உட்செல்லாத காடு என்பதால் தரையில் புற்கள், மூடுபடைகள் காணப்படுவதில்லை. இவ் வனம் என்றும் பசுமையான மழைக்காடு என்பதால் இங்குள்ள மரங்களில் இருந்து கொத்துக்கொத்தாக லீச் அட்டைகள் விழும்.இதிலிருந்து தப்புவதற்கு நீங்கள் வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும்.

காட்டின் அகத்தே பல நீர்வீழ்ச்சிகளையும் சலசலத்துப் பாயும் ஆறுகளின் ஓசையும் மனத்திற்கு இதமானவை. ஆற்றின் மேலாக அழகிய தொங்குபாலமொன்றும் உள்ளது. இதில் நீங்கள் ஏறிச் செல்லும் போது இனிய அனுபவமொன்றைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு நாள் பயணத்தில் பார்த்து திரும்பி வருதல் இயலாத காரியம். எனவே அங்கு தங்கி நின்று பார்க்கும் ஏற்பாட்டுடன் சென்றால், அங்கிருக்கும் கபானாக்கள், காட்டுபங்களாக்களில் தங்கி நின்றுவரக்கூடியதாக இருக்கும். இதன்போது காட்டின் முழுமையை முற்றாக இரசிக்ககூடியதாக இருக்கும்.